சென்னை: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் நலகொண்டான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள். இவர், வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, உடநலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை கடந்த மார்ச் மாதம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி மனநல காப்பகத்தில் உள்ள ஒரு குளியல் அறையின் கதவு மட்டும் நீண்ட நேரம் மூடியே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை திறந்துள்ளனர். அப்போது ராஜம்மாள் துண்டை ஜன்னலில் கட்டி தூக்கிட்டு இறந்தது தெரிந்தது.
விசாரணையில் ராஜம்மாளை உறவினர்கள் யாரும் வந்து பார்க்காததால் மனஉளைச்சலில் தூக்கிட்டு இறந்ததும் தெரிந்தது. இதுகுறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளியானது. இந்த செய்தியை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். பின்னர் விசாரணை செய்த நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 5 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மனநல காப்பகத்தில் பெண் கைதி தற்கொலை மருத்துவக் கல்வி இயக்குனர் அறிக்கை அளிக்க வேண்டும்: மனித உரிமை